பக்கங்கள்

இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 பிப்ரவரி, 2011

இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி?


அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்  “ஒவ்வொரு மனிதனின் உடலிலும் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகளும் இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு எலும்பு மூட்டும் ஒரு ஸதகா அல்லது நன்றியறிவத்தலை வேண்டுகின்றது. எனவே ஒருவர் அல்லாஹ் அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அஸ்தக்ஃபிருல்லாஹ் சொல்கின்றார்; மக்கள் நடக்கின்ற பாதையிலிருந்து கல்லையோ, எலும்புத் துண்டையோ  அப்புறப்படுத்துகின்றார்; அல்லது நல்லவற்றைச் செய்வுமாறு மக்களை ஏவுகின்றார்; அல்லவற்றிலிருந்து விலகியிருக்குமாறு மக்களைத் தடுக்கின்றார்; இதுபோன்று முந்நூற்றறுபது வகையான செயல்களில் ஈடுபடுகின்றார் எனில், அவர் அந்த நாளில் நரக நெருப்பிலிருந்து தன்னுடைய உடலை அப்புறப்படுத்திய நிலையில் இந்த உலகில் இங்குமங்கும் நடக்கின்றவராகின்றார்”

நூல் : முஸ்லிம்

விளக்கம் :
இந்த நபிமொழியில் மனிதன் மீது இறைவன் பொழிந்துள்ள கணக்கற்ற அருட்கொடைகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அருள்வளங்களை மனிதன் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்நேரமும் அவற்றைக் குறித்த விழிப்பு உணர்வுடன் வாழ வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி சிந்தையிலும் செயலிலும் நன்றியுணர்வு மிகைத்திருக்க இயங்க வேண்டும் என்றும் அந்த அருட்கொடைகளைக் கொடுத்தவனை மறந்து, நன்றி கெட்டத் தனத்துடன் இறைவனை மறுத்து வாழ்வது எந்த வகையிலும் சரியான வழிமுறை ஆகாது என்றும் இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி என்பது குறித்தும் இந்த நபிமொழியில் அழகிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இப்படித்தான் நன்றி செலுத்த வேண்டும் என்று குறுகிய நடைமுறைகளைத் திணிக்காமல், நன்றி செலுத்துவதற்கான வழிமுறையை வரம்பில்லாத அளவுக்கு விரித்து இறைவன் மிகப்பெரும் அருள் செய்திருக்கின்றான் என்கிற உண்மை இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்லாஹ் அக்பர் என அல்லாஹ்வின் மேன்மையைப் பறைசாற்றுவதும், அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வின் புகழ் பாடுவதும், சுப்ஹானல்லாஹ் என அல்லாஹ்வின் தூய்மையை துதிப்பதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும் என்று அறிவிப்பதோடு நின்றுவிடவில்லை. இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செய்யப்படுகின்ற எந்தவொரு நற்செயலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஒப்பானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடலில் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகள் இருக்கின்றனவெனில், அந்த எலும்பு மூட்டு ஒவ்வொன்றும் இறைவன் மனிதனுக்கு செய்துள்ள மிகப் பெரும் நன்மையாகும். அந்த எலும்பு மூட்டுகளில் ஒன்றாவது குறைந்து போனாலும், செயலிழந்து போனாலும், முடங்கிப் போனாலும் அதனால் மனிதன் மிகப் பெரும் சிரமத்துக்குள்ளாகிவிடுகின்றான்.

இந்த நிலையில் இந்த முந்நூற்றறுபது அருள்வளங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி? இறைவனின் மேன்மையைப் பறைசாற்றியும், இறைவனைப் புகழ்ந்தும், இறைவனின் தூய்மையை துதிபாடியும் நன்றியுணர்வால் நம்முடைய நாவுகளைத் தோய்த்தெடுத்து நம்முடைய நன்றியை வெளிப்படுத்தலாம். அவனுக்கு முன்னால் சிரம்தாழ்த்தி நன்றி செலுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவதொரு நற்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருத்தல்; தீமையிலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களை மீட்பதற்காக ஓயாமல் ஒழியாமல் பாடுபடுதல்; நன்மையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள் என அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபடுதல்; தீமைகளிலிருந்து அவர்களை விலக்குவதற்காக முழுமூச்சுடன் பாடுபடுதல் போன்ற அறப்பணிகளைச் செய்வதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் போகின்ற பாதையில் கிடக்கின்ற கற்களை அகற்றுதல், பாதையில் மக்களுக்குத் தொல்லை தருகின்ற, ஊறு விளைவிக்கின்ற பொருட்கள் ஏதேனும் கிடந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன அறச்செயல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இவ்வாறாக, அன்றாடம் கிடைக்கின்ற சின்னச் சின்ன வாய்ப்புகளையும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்தோமெனில் நம்முடைய நிலை படிப்படியாக வளர்ந்து ஈடேற்றம் பெறுவதற்காக முயல்கின்றவர்கள் என்கிற நிலையையும் தாண்டி ஈடேற்றம் பெற்றவர்கள் என்கிற நிலைக்கு நாம் உயர்ந்துவிடுவோம்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

கோப்பை தரும் செய்தி!!



இன்று நாட்டில் நடப்பதென்ன...?

நாளிதழ்களைப் பிரிக்காமலும், தொலைக்காட்சியைத் தட்டாமலும், இணையத்தில் தேடாமலும் கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், கடத்தல்கள், அரசியல் சண்டைகள், ஆபாசக் கூத்துக்கள்...!

உலகெங்கும், நாடெங்கும் இதே சூழல்தான். இதே கோலம்தான். இதே அவலம்தான்.
போதாக்குறைக்குசுனாமி, விபத்து, உயிர்பலி என சோகங்களை இறைக்கும் நடப்புகளும் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்றன.
உயிரிழப்புகள், ஊனங்கள், காயங்கள்...!

நிறுத்துங்கள். இதில் என்ன அதிசயம்...! நாடறிந்த உண்மை அல்லவா, இது! என்கிறீர்களா?
உண்மைதான்.

என்றாலும் கலவரங்கள், உயிரிழப்புகள், கொலைகள், நோய்கள், விபத்துகள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர்மறையான நடத்தைகளும், செய்திகளும் முகத்திலடிக்கும் போது - படித்தவர்களே ஊழலில் ஈடுபடுகிற, பேராசிரியர்களே கற்பழிக்கிற, விஷய ஞானம் மிக்கவர்களே விதிமுறைகளை மீறுகிற ஆன்மீகப் பெரியோர்களே மாபாதகச் செயல்களில் ஈடுபடுகிற அவலங்கள் மனதை நோகடிக்கும் போது - என்ன செய்வீர்கள்?

நான் தேநீர் குடிப்பேன்.

“நானும் தான்" என்று சொல்லிக் கொண்டே சுழற் நாற்காலியில் ஸ்டைலாக வந்தமர்ந்தார், நண்பர்.

தேநீர் கோப்பையை நீட்டினார்.

என்னைப் பொருத்தவரை தேநீர் பருகுவதும் ஒரு கலை. கண்ணாடிக் குவளையை விட, எவர்சில்வர் குவளைகளை விட, பீங்கான் கோப்பையில் தேநீர் குடிப்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

‘இது சாதாரண கோப்பை அல்ல. கதை சொல்லும் கோப்பை இது’ என்றார் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன்.

அழகான தேநீர் கோப்பை அது.
ரோஜாப் பூ வேலைப்பாடுடன் நளினமாக, ரம்மியமாக, நேர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது.

திடீரென்று அது பேச தொடங்கி விட்டது.

'உங்களுக்குப் புரியாது; நான் சில மாதங்களாகத் தான் தேநீர் கோப்பையாக இருக்கிறேன். அதற்கு முன்பு களி மண்ணாக இருந்தேன். உயர் வகையான சிவந்த மண்...!

என்னுடைய முதலாளி தான் முதலில் என்னை எடுத்தார். உருட்டினார். மீண்டும் மீண்டும் உருட்டி ஓங்கித் தட்டத் தொடங்கினார்.
என்னால் தாங்க முடியவில்லை. என்னை விட்டு விடுங்கள்!" என்று கத்தினேன்.

அவர் புன்னகைத்தார். “இவ்வளவு சீக்கிரமா? மாட்டேன்" என்று தலையசைத்தார்.

அடுத்து நான் ஒரு கை ராட்டினத்தில் வைக்கப்பட்டேன். பிறகு திடீரென்று நான் வேக வேகமாக சுழற்றப்பட்டேன்.
“நிறுத்துங்கள் எனக்கு மயக்கமாக வருகிறது" என்று கத்தி விட்டேன்.
ஆனால் முதலாளியோ வெறுமனே தலையசைத்தார். “இவ்வளவு சீக்கிரமா...? மாட்டேன்" என்றார்.

அடுத்து அவர் என்னை ஒரு ஓவனில் உலை அடுப்பில் போட்டு விட்டார். நான் அதற்கு முன்பு என்றுமே அந்தளவுக்கு சூடுபட்டது கிடையாது.
இவர் என்னை ஏன் எரிக்கிறார், என்றே எனக்குப் புரியவில்லை. கூக்குரலிட்டேன். அடுப்புக் கதவைத் தட்டினேன். அடுப்புக் கதவின் துவாரத்தில் அவருடைய முகத்தைக் காண முடிந்தது.
“இவ்வளவு சீக்கிரமா...? மாட்டேன்" என்று தலையசைத்துக் கொண்டே சொல்வதை அவருடைய உதடுகளின் அசைவைக் கொண்டு என்னால் ஊகிக்க முடிந்தது.

அப்பாடா! ஒரு வழியாக கதவு திறந்தது.
அவர் என்னை எடுத்து ஷெல்ஃபில் வைத்து விட்டார். என் உடல் தணிய தொடங்கியது. “ஒரு வழியாக தப்பித்தேன்" என்று பெருமூச்சு விட்டேன்.

அதற்குள் அவர் என்னை எடுத்து தூரிகையால் தடவி விட்டு பெயிண்ட் அடிக்கத் தொடங்கி விட்டார்.
சுள்ளென்று என்னுடைய மேனி தகித்தது. ஆவி பறந்தது. தோல் உரிவது போன்ற உணர்வு...! பயங்கரமாக இருந்தது.
“நிறுத்து! நிறுத்து! என்று அடித்தொண்டையில் கத்தி விட்டேன்.
அவரோ வெறுமனே தலையசைத்து “இவ்வளவு சீக்கிரமா? மாட்டேன்" என்றார்.

அடுத்துதிடுதிப்பென்று என்னை எடுத்து மீண்டும் உலை அடுப்பில் வைத்து விட்டார், அவர்.
முந்தைய அடுப்பைப் போன்றதல்ல இது. அதனை விட இரண்டு மடங்கு சூடாக இருந்தது. என் உடல் அனலாகக் கொதித்தது. மூச்சுத் திணறி உயிர் விட்டு விடுவேனோ என்று பயந்தேன். கெஞ்சினேன். மன்றாடினேன். கூக்குரலிட்டேன். கதறியழுதேன்.
ஆனால் “இவ்வளவு சீக்கிரமா...! மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கதவிடுக்கிலிருந்து உற்றுப் பார்த்த போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்தது.

அடுத்து நான் நம்பிக்கையை முற்றாக இழந்து விட்டேன். என்னுடைய கதை முடிந்து போச்சு என்றே நம்பினேன். கண்களை மூடிக் கொண்டேன்.
திடீரென்று கதவு திறந்தது. அவர் என்னை எடுத்து ஷெல்ஃபில் வைத்தார். ஷெல்ஃபின் சூழல் இதமாக, குளிர்ச்சியாக இருக்க, நீண்ட நேரத்துக்குப் பிறகு புன்னகைத்தேன்.

ஓரிரு மணி நேரம் கழிந்து விட்டது. என்னுடைய எஜமானர் வந்தார். என்னிடம் ஒரு கண்ணாடியைத் தந்தார்.
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். “நான் தானா அது...?" என்னால் நம்பவே முடியவில்லை. அழகு கண்ணா, அழகு!" என்று மகிழ்ச்சிப் பெருக்கில் உற்சாகக் குரல் கொடுத்தேன். “நான் அழகாக இருக்கிறேன். நான் அழகாக இருக்கிறேன்" வாய் விட்டு சிரித்தேன்.

என்னுடைய எஜமானர் சொன்னார், இப்போதுபுரிகிறதா...! உன்னை உருட்டும் போதும், ஓங்கி அடிக்கும் போதும் உனக்கு வலிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் உருட்டாமலும், ஓங்கி அடிக்காமலும் விட்டிருந்தால் நீ காய்ந்து போய் இருப்பாய்! சக்கரத்தின் நடுவே வைத்து வேகமாகச் சுற்றிய போது மயக்கம் வருவது போல நீ நிலை தடுமாறியதும் எனக்குத் தெரியும். சக்கரத்தைச் சுழற்றுவதை நடுவிலேயே நிறுத்தியிருந்தால் உனக்குள் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கும்...! உலை அடுப்பில் சூடும் அதிகம். புழுக்கமும் அதிகம். வலியும் வேதனையும் உயிரை எடுக்கும்" என்பதெல்லாம் எனக்கு தெரிந்தே இருந்தது. ஆனால் உன்னை அடுப்பில் வைக்காமல் விட்டு விட்டால் நீ உறுதியடைந்திருக்க மாட்டாய்! தூரிகை தடவும் போது ஆவி பறக்கும். அதனால் நீ துடியாய்த் துடிப்பாய் என்பதையும் நான் அறிவேன். ஆனால் உன் மீது பெயிண்ட் அடிக்காமல் விட்டிருந்தால் உனது வாழ்வு நிறமற்று, சோபையிழந்து, சுரத்தின்றி, சுவையின்றி, களையிழந்து போய் இருக்கும். இரண்டாவது அடுப்பில் உன்னை வைக்காமல் விட்டிருந்தால் உன்னால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. உறுதியும் கட்டுக்கோப்பும் குலைந்து போயிருக்கும். இப்போது நீ ஒரு அழகான கோப்பை ஆகி விட்டாய். தொடக்கத்தில் நீ ஒரு பிடிமண்ணாக இருந்த போது உன்னை எப்படி ஆக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அவ்வாறு நீ ஆகி விட்டாய். எனக்கு சந்தோஷம். உனக்கும்தானே...!" என்று என் எஜமான் விவரித்தார்.

தேநீர் கோப்பை சொல்லி முடித்தது.

மனித குலத்துக்காக எதைச் செய்கிறோம்; எதனை வழங்குகிறோம்; எதனைப் பறிக்கிறோம் என்கிற உணர்வும் தெளிவும் கொண்டவன் தான் இறைவன். அவன் அனைத்தையும் அறிந்தவன். எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவன்.அவன் தான் குயவன். அவனுடைய களிமண் தாம் நாம் எல்லாரும். அவன் நம்மை உருட்டுவான், தட்டுவான், எதையும் செய்து எதனையும் உண்டாக்குவான். அவனுடைய உவப்பைப் பெறுவதற்காக, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி வாழ்ந்தால் நிச்சயம் நன்மைதான். அதில் தான் மனித வாழ்வின் சூட்சுமமே அடங்கியுள்ளது.

“தேநீர் கோப்பை சொன்ன கதையில் இத்துணை செய்திகளா...? சந்தோஷத்துடன், உம்மை என்னவோ என்று நினைத்தேன்...! ஆனால் உம்முடைய தேநீர் கோப்பையும் தத்துவம் பேசுகிறதே..." என்றேன்.என்னவாக நினைத்தீர்?" என்று முஷ்டியை மடக்கிக் கொண்டு வேகமாக நெருங்கினார், நண்பர்.

அதனை விடுங்கள். முத்தாய்ப்பாக ஒரு நபிமொழியைக் கேளுங்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
இறை நம்பிக்கையாளரின் நிலை வியப்பானது! திண்ணமாக அவனுடைய பணிகள் அனைத்தும் நன்மையாகவே உள்ளன. இத்தகையதொரு நற்பேறு இறைநம்பிக்கையாளனை அன்றி வேறு யாருக்கும் இல்லை! அவனுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறான்; அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் நன்றி செலுத்துகின்றான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகின்றது. (அதாவது எந்தவொரு நிலையிலும் அவன் நன்மையைத் திரட்டிக் கொள்வான்.)"
Cross posted in நெஞ்சோடு

சனி, 26 ஜூன், 2010

தேவ கௌடா, அல்லாமா இக்பால் மற்றும் ஒரு புகைப்படம்


சென்ற செவ்வாய்க் கிழமை (22 ஜூன் 2010) கர்நாடக மாநில்த்தில் சிக்மங்களூருக்கு வந்த முன்னாள் பிரதமர் தேவ கௌடா வந்த போது அரங்கேறிய ஓர் காட்சியைத்தான் மேலே பார்க்கின்றீர்கள்.

தமிழ்நாட்டில் இது செய்தியே இல்லை என இழுக்கின்றீர்களா? கௌடாவின் முன்னால் விழுந்து கிடக்கின்றவர் மெத்தப் படித்தவர். அந்த நகரத்திலேயே பெரிய மருத்துவர். அதுவும் பல் மருத்துவர்.

அவரிடம் போகின்றவர்கள்தான் இந்நாள் வரை வாய் பிளந்து கொண்டிருந்தார்கள். இந்த நடத்தையின் மூலம் பார்க்கின்றவர்கள் எல்லாரையும் வாய் பிளக்கச் செய்துவிட்டாரே என்கிறீர்களா? அந்தக் கவலையை விடுங்கள்.

எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

ஏக் சஜ்தா ஜி ஸே தூ கிரான் சமஜ்தா ஹே
ஹஸார் சஜ்தே ஸே தேதா ஹே ஆத்மி கூ நஜாத்

“இறைவனுக்கு முன்னால் சிரம் பணிவது உனக்குப் பாரமாய்த் தெரிகின்றது. ஆனால் அது ஆயிரம் சிரம் பணிதல்களிலிருந்து உன்னை விடுவித்துவிடும்.”

இறைவன் மீதான அச்சம் இல்லாதவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அச்சம்தான். பயம்தான்.

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்றவர்களுக்கோ வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. சக மனிதர்களுக்க முன்னால் சிரம் பணிய வேண்டிய தேவையும் இருப்பதில்லை.

“உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே. உதவி தேடப்படுகின்றவர்களும் பலவீனர்களே” (குர்ஆன் 22 - 73) என்கிற குர்ஆன் வசனம் நினைவுக்கு வருகின்றது என்கிறீர்களா?

சரிதான்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஊக்கமது கைவிடேல்!! - ஏ.பீ. முகம்மது அலி


ஏ.பீ. முகம்மது அலி அவர்கள் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றை நண்பர் முதுவை ஹிதாயத் அனுப்பி இருந்தார். மனதுக்குத் தெம்பளிக்கின்ற எழுத்துக்கள்..! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சில திருத்தங்களுடன் இங்கே பதிவாகிறது!

2010 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த நிகழவு அது.
சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரி செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(தி முஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேசன் ஆப் சதர்ன் இந்தியா,புதுக்கல்லூரி) உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான(ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழக தேர்வுகள்) ஒரு பயிற்சி  மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றேன.;

அதற்கு ஒரு முன்னாள் செயலளரும் தற்போதைய உதவி தலைவருமான ஒருவர் சொன்னார் ‘போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சு கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார்.

அவர்  தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பெறுவது என்ற செயலில் இறங்க அவர் மனம் நாடவில்லை. இதைத் தான் ஆங்கிலத்தில், ‘டிபீட்டிஸம்’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.
 
      பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் அடுக்கடுக்காக தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. 
 
அந்த நாட்டுத் தலைவருக்கு ஒரு நாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், ‘ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது, உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா என்று வினவினார்?’ அப்போது அந்தத் தலைவர், நெப்போலியனைப்பார்த்து, ‘உன்னால் முடியுமா என்றார்?’ அதற்கு ஒரே வரியில் நெப்போலியன், ‘முடியும்’ என்றான். 
 
பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதிற்கு சிறுவன் போல இருந்தாலும் பிரான்ஸ் நாட்டுத்தலைவராகி போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். வுரலாற்றில் அவனது வெற்றியினை, ‘ஐ ஃபவுண்ட் தி துரோன் ஆப் பிரான்ஸ் ஆன் தி கிரவுண்ட், அன்டு ஐ பிக்ட்டு இட் பை மை ஸ்வோர்ட்’ என்று நெப்போலியன் சொன்னதாக ஆங்கிலத்தின் இருக்கிறது. அதாவது ‘பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன்’ என்றான்.  ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி உன்னை நெருங்காது என்றால் மிகையாகாது.
 
      அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வந்தனர். ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது அவர்கள் சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள் அத்துடன் சர்ச்சுளிலும் பிராத்தனை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. 
 
உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
என்ன ஆச்சரியம்? 
 
அவர்கள் எதிர்பார்த்தது போல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். 
 
இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் ஏன் என்று அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல யோசித்து நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள். 
ஏன் கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் முடியாதா? சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம் போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா? எத்தனை லட்சம் ரூபாய்கள் நன்கொடையாக வருகின்றன, மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்கு பயிற்சி அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை? ஆனால் பதவி சுகமே மேலான ஒன்றாக கருதும் முஸ்லிம் தன்வான்களிடம் நாம் எதை எதிர்ப்பார்க்கமுடியும்?
      முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ்கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும்  6.2.2010  அன்று தமிழில், ‘வெற்றிக்கொடி நாட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன் என்ற கட்டுரைகளை எழுதியுள்ளேன். 
 
தனி நபர்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் ஒரு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. 
ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் அளிக்கப்படுவது வரவேற்க தக்க ஒன்று. அவர்களுக்கு தேவையான யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன் என்பதினை உங்களுக்கு இந்தத் தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.
       அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்பதில் ஐயமில்லை. பெரிய கட்டிடம் எழுப்ப சிறிய கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அது போலத்தான் சில எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகும், ஒரு பட்டுப்புடவை செய்ய சில பட்டு நூல்கள் தேவை, பெரிய மாலை செய்ய பல பூக்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் நடக்க முடியுமா? வெற்றியினை தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை.
 
      எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினை பறிக்க முடியாது. தோல்வி மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துக்களைக எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதே நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம். 
 
ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதினை வழியுறுத்தி ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சியில் தங்களை ஈடுபடுத்துவது போல் மற்ற அமைப்பினரும் பல் வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாய படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
      பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும் 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞரகள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள.; காரணம் கயிறு அல்லது மரம் ஏறி பழக்கம் இருக்காது, ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்து பழகவேண்டும் மற்றும் மரத்தில் கயிறு கட்டி ஏறி பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்கள் நெஞ்சு ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் பழக்கமிருந்தால்தான் வரும். 
 
முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு அந்த பயிற்சி கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் விளையாடுவார்கள் ஆனால் படிப்பினை முடித்து விட்டு கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டுள்ளவர்கள் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. 
 
நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினை கைவிடக்கூடாது. அவை உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். 
 
ஒரு பரிட்சையில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினை கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் தான்.; ஆகவே தான் ஊக்கமது கைவிடேல் என்றேன்.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது..!

மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி
  
அவர்கள் காத்திருந்தார்கள்..! 

ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.
அந்த நடைமேடையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். திரும்பும் திசையெல்லாம் வெள்ளை தொப்பிகளும், கருந்தாடிகளுமாக சூழலே வித்தியாசமாக இருந்தது.
ரயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது போல தோன்றியது.
....  .... ....

Your attention please.... பயணிகளின் அன்பான கவனத்திற்கு.... என அறிவிப்பாளரின் குரல் ஒலித்ததும் ரயில் நிலையமே சிலிர்த்தெழுந்தது..!
போர்ட்டர்கள் முண்டாசு கட்டிக் கொண்டு, துண்டு பீடியை தூர எறிந்தவாறு ரயிலை எதிர்கொள்ள ஆயத்தமாகினர்.
ரயில் வந்தது.
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பெட்டியை நோக்கி படையெடுத்தனர்.
அந்தப் பெட்டியிலிருந்து இறங்கினார், மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி.
....  .... ....

மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!

மௌலானாவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. சிரித்த முகத்துடன் மௌலானா கை குலுக்கினார். நலம் விசாரித்தார்.

பச்சை விளக்கு எரிந்து விட மீண்டும் வண்டியில் ஏறி விட்டார்.

நடை மேடையில் நின்ற மக்கள் அன்போடு கேட்டார்கள் : Moulana kuch nasihat keejiye..! மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!

வண்டி மெல்ல நகரத் தொடங்கியது..!

மௌலானா சொன்னார்: Muthahid rahiye..! muththahrik rahiye..! முத்தஹித் ரஹியே..! முத்தஹ்ரிக் ரஹியே..! ஒன்றுபட்டு இருங்கள்..! சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருங்கள்..!
....  .... ....

இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!

அவர் தான் மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி. கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது   என்பதைப் போல எத்துணை அழகாக இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார்!
மௌலானா மிகப் பெரும் பேச்சாளர். மணிக்கணக்கில் சலிப்புத் தட்டாமல் பேசுவதில் வல்லவர்.

2002 இல் இதே ஏப்ரல் மாதத்தில் 4 ஆம் நாள் அன்று காலமானார். (இன்னா லில்லாஹி..)

ICU இல் மரணப் படுக்கையில் இருந்த நேரத்திலும் நினைவு திரும்பும் போதெல்லாம் குஜராத் நிலவரம் குறித்து தான் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவரைப் போன்ற ஆலிம்கள் தான் இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!
அல்லாஹ் கிருபை செய்வானாக..!

புதன், 24 மார்ச், 2010

எதனையும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!

அதனைச் சாதாரணமாக கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப் பெரிய விஷயமாய் இருந்தது.

(குர்ஆன் : 24 : 15) 

புதன், 10 பிப்ரவரி, 2010

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாடு!!










அன்புச் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
திருச்சியில் நடந்து முடிந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டில் ஜமாத்தே இஸ்லாமி அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுதீன் உமரி அவர்கள் ஆற்றிய உரை தான் மேலே தரப்பட்டது.

வியாழன், 30 ஏப்ரல், 2009

விஷமத்தனமான பிரச்சாரம்! மதன் கடுப்பு!




முஸ்லிம்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் எனச் சொல்வது விஷமத்தனமானது என்று கார்டூனிஸ்ட் மதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைத்த இஸ்லாமியக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு மனம் திறந்துப் பேசினார்.

கேள்வி பதிலுக்கு பேர் பெற்ற மதன், "ஒரு தனி மனித வாழ்வில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் ஒரே வேதம் குர்ஆன் தான்" என மிகவும் சிலாகித்துச் சொன்னார்.

அவர் ஆற்றிய உரை முழுமையாக சமரசம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

புதன், 29 ஏப்ரல், 2009

நலிவுற்றவர்களை மேம்படுத்துவதற்காக அதிரடித் திட்டம்!


நாட்டில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நலிவுற்ற மக்களை மேம்படுத்துவதற்காக அதிரடித் திட்டம் ஒன்றை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் வகுத்துள்ளது.

சுதந்தர இந்தியாவின் வரலாற்றில் இது வரை எந்தவொரு ஒற்றை அமைப்பும் செய்திராத மகத்தான திட்டம் இது.

விஷன் 2016 என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து திட்ட இயக்குனர் பேராசிரியர் சித்தீக் ஹசன் சமரசம் இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:


கூடுதல் தகவல்களுக்கு : விஷன் 2016
என். ஜி. ஒ.க்கள் பற்றிய புத்தகம்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

உள்ளத்தை உலுக்கிய படம்!!





ஆறு நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.

ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?

உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

ஏழு நூறு மடங்கு இலாபம்!


அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போரின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன்மடங்காக்குகிறான்.
(திருக்குர்ஆன். 2 : 261)

வியாழன், 16 ஏப்ரல், 2009

கனவு மெய்ப்பட...!



உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் - அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் கலீஃபா ஆக்குவான். அவர்களுக்கு முன் சென்று போன மக்களைக் கலீஃபா ஆக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாக மாற்றித் தருவான். எனவே அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும் என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும்.
(திருக்குர்ஆன் 24 : 55)

கலீஃபா - கிலாபத் நிலைநாட்டுவதற்கு இரண்டு அடிப்படைகள் : 1) இறைநம்பிக்கை, 2) நற்செயல்கள்.
அதற்கும் மேலாக ஏகத்துவம் .
இந்த மூன்றும் இல்லாமல் கிலாபத் ஒரு கனவு தான்.

,

ஞாயிறு, 29 மார்ச், 2009

வீடும் வாசலும் வாகனமும்...!


அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: மறுமை நாளில் செயல்களை எடை போடும் மீஜான் எனும் எடைத் தட்டில் வைக்கப்படும் பொருள்கள் அனைத்திலும் மிகவும் கனம் வாய்ந்தது நற்குணமே!
அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதி

விளக்கம்

நற்குணங்களும் நன்னடத்தையும் தான் மனித வாழ்வின் உண்மையான அழகு ஆகும். உண்மையான மனித நடத்தையோடு இயைந்து போவது நற்குணமும் நன்னடத்தையும்தான். எனவே மீஜான் எனும் எடைத்தட்டில் எல்லா செயல்களை விடவும் மிக அதிகமான கனம் வாய்ந்ததாக நற்குணமும் நன்னடத்தையும் இருப்பது இயல்பான ஒன்றே.

மனிதனிடம் என்னென்ன வாழ்க்கை வசதிகள் உள்ளன? எத்தனை மகிழுந்துகள் உள்ளன? மாட மாளிகைகள் எத்தனை? போன்ற விவரங்களைக் கொண்டு எவரும் மனிதனை அடையாளம் காண்பதில்லை. ஆள் எப்படி? குணம் எத்தகையது? நடத்தை எப்படி என்பதைக் கொண்டே ஒரு மனிதன் உண்மையாக அடையாளம் காணப்படுகிறான்.

உலகில் என்ன சம்பாதித்தாய்? எத்தனை மகிழுந்துகளை வைத்திருந்தாய்? வங்கி இருப்பு எவ்வளவு சேமித்திருந்தாய்? எந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தாய் என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டான். எத்தகைய ஆளுமையுடன் எத்தகைய குணங்களுடன் வந்துள்ளாய் என்பதுதான் அசல் கேள்வியாக இருக்கும்.

ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒருவரின் சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நற்குணம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டே அவருடைய ஆளுமை அமையும்.

ஒருவர் என்னதான் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக, செல்வாக்கு மிக்கவராக, அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரிடம் நற்குணமும், நன்னடத்தையும் உயர் பண்புகளும் இல்லாமல் போனால் உண்மையில் அவர் பஞ்சப் பராரியான, இழிவான பிறவியே ஆவார்.

சனி, 28 மார்ச், 2009

கடைசி வரை கல்வி!!


அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் பெயரால்!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்:
இறைநம்பிக்கையாளனின் வயிறு நன்மையால் (அறிவு, ஞானம் நிறைந்த பேச்சுக்களால்) என்றைக்குமே நிறைவதில்லை. அவன் அதனைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றான். எதுவரையெனில் கடைசியில் சுவனத்திற்குச் சென்று சேர்ந்து விடுகின்றான்.
அறிவிப்பாளர் : அபு சயீத் குத்ரி (ரலி)
நூல் : திர்மிதி


சனி, 25 அக்டோபர், 2008

செயல்படு; செலவு செய்; விலகி இரு!

செயல்படு; செலவு செய்; விலகி இரு!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: "கற்றதற்கேற்ப செயல்பட்டவனுக்கும்தன்னுடைய தேவைகள் போக எஞ்சியதை (இறைவழியில்) செலவுசெய்தவனுக்கும் தேவையற்ற பயனற்ற பேச்சுக்களிலிருந்துமசெயல்பாடுகளிலிருந்தும் விலகி இருந்தவனுக்கும் நற்செய்தி இருக்கிறது."
அறிவிப்பாளர்: ரகப் மிஸ்ரி (ரலி)
நூல்: தப்ரானி
விளக்கம்
இந்த நபிமொழியில் மூன்று விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணல் நபிகளார்(ஸல்) முன்று வகையான நபர்களுக்கு நற்செய்தி அறிவித்துள்ளார்.

முதலாமவர், தான் கற்றுக் கொண்டதற்கேற்ப செயல்படும் பண்பு கொண்டவர். இன்று அறிவுக்குப் பஞ்சம் கிடையாது. செயலுக்குத் தான் பற்றாக்குறை காணப்படுகிறது. Knowledge explosion என்கிற அறிவுப் புரட்சி வெடித்திருக்கிற யுகம் இது.

இந்த அறிவு யுகத்தில் மார்க்க அறிவு, மார்க்கத்தைப் பற்றிய தகவல்கள் கூட எல்லாருக்கும் மிகத் தாராளமாகவே கிடைக்கிறது...! எத்தனை பத்திரிகைகள்..! எத்தனை வலைத் தளங்கள்..! எத்தனை எத்தனை நூல்கள்..! தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்..!

இதன் காரணமாக 'சோதனை' கூட கடுமையாகிவிட்டது. தீமை எது? நன்மை எது? எதனைச் செய்ய வேண்டும்? எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்? எல்லோருமே அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் அறிவு மட்டும் போதாது. அறிவாளிகளுக்கு நற்செய்தி அளிக்கப்படவில்லை. கற்றதற்கேற்ப செயல்படுபவருக்கே நற்செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக நற்செய்தி சொல்லப்பட்டிருப்பவரின் சிறப்பு என்னவெனில் அவர் தன்னுடைய தேவைகளுக்கு அதிகமாக எஞ்சி இருக்கும் பொருளை இறைவனின் வழியில் செலவிடக் கூடியவராக இருப்பார்.
எது தேவை? எது ஆடம்பரம்? இந்த இரண்டையும் பிரிக்கின்ற எல்லைக் கொடு எது? நிர்ணயிப்பது கடினம். கொஞ்சம் சிக்கலான நுணுக்கமான பிரச்னை தான்.
எல்லோருமே தத்தமது வாழ்க்கைத் தரத்துக்கேற்ப தத்தமது தேவைகளை நிர்ணயிக்கின்றார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக ஒருவரிடம் எத்துணை பொருள் இருக்கிறது என்பதை மற்றவர்களால் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரும் சுயமாக அதனை நிர்ணயித்துக் கொள்ளவது தான் நல்லது.

வெள்ளி, 24 அக்டோபர், 2008

அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:

அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:
"மனிதர்களுடன் கருணையுடன் நடந்துக் கொள்ளாதவன் மீது இறைவனும்கருணை காட்ட மாட்டான்."
அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி)
நூல்: புஹாரி, முஸ்லிம்.

விளக்கம்:

இதே பொருளில் அநேக நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "யார் கருணை காட்டுவதில்லையோ, அவர் மீது இறைவனும் கருணைகாட்ட மாட்டான்." (முஸ்லிம்) "மக்கள் மீது கருணை காட்டாதவர்கள் மீதுஇறைவனும் கருணை காட்ட மாட்டான்." (புஹாரி)

இதே போல இன்னொரு நபிமொழியில். "நம்மில் சிறியவர்கள் மீது அன்புசெலுத்தாதவனும் பெரியவர்களின் உரிமைகளை புரிந்து நம்மைச் சேர்ந்தவர்அல்ல" (அபூ தாவூத்) என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அஹ்மத், திர்மிதி ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ள ஒருநபிமொழியில், "பெரியவர்களை மதிக்காதவனும் சிறியவர்களிடம் இரக்கத்துடன்நடந்துக் கொள்ளாதவனும் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிற கடமையைநிறைவேற்றாதவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன் (நம்முடையவழிமுறையின்படி நடப்பவன் அல்லன்.)" எனச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நபிமொழிகளிலிருந்து ஒரு உண்மை எடுப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது: "இறைவனின் அடியார்களுடன் கனிவுடனும் அருளுடனும் நாம் நடந்துக்கொண்டால் மட்டுமே இறைவனின் உதவிக்கும் அவனுடைய இரக்கத்துக்கும்கருணைக்கும் தகுதியானவர்களாக ஆவோம்."

நாம் இவ்வாறு அழகிய இளகிய நடத்தையை மேற்கொள்வோமேயானால்இறைவனின் கருணை நமக்குக் கிடைத்து விட்டது என்று பொருள் ஆகும். நம்மிடம் அந்த இளகிய நடத்தையே இல்லையெனில் இறைவனின் உதவிகள், அவனுடைய கருணை, கிருபை ஆகியவற்றை விட்டு நம்மை நாமே வெகு தூரம்விலக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் நாம் என்று பொருள் ஆகி விடும்.

நபிமொழியில் 'அன்னாஸ்' (மனிதர்கள்) என்கிற சொல் கையாளப்பட்டுள்ளது. மனிதர்களில் நம்பிக்கையாளர்கள், தீயவர்கள், நிராகரிப்பாளர்கள் எல்லோருமேஅடங்கி விடுவார்கள்.

எல்லா மனிதர்களும் நம்முடைய கிருபைக்கும் கருணைக்கும்உரித்தானவர்களே!
இன்னும் சொல்லப் போனால் இறைநிராகரிப்பாளர்கள்குறித்து நமக்குள் சற்று அதிகமாகவே அன்பும் கருணையும் தவிப்பும் இருக்கவேண்டும். இறைநிராகரிப்புப் போக்கிலிருந்து இவர்கள் விலக வேண்டாமா? இறைவேதனையிலிருந்து இவர்கள் தப்ப வேண்டாமா? என்கிற கவலைஅதிகமாக இருக்க வேண்டும்.

வியாழன், 23 அக்டோபர், 2008

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!
அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."
நூல்: புகாரி. முஸ்லிம்

புதன், 22 அக்டோபர், 2008

அண்ணல் நபி அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு :
"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.

பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.

மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.

தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

செவ்வாய், 21 அக்டோபர், 2008

சிந்தனைத் துளிகள்: மனதுக்குள் வெளிச்சம்..!

சிந்தனைத் துளிகள் - மனதுக்குள் வெளிச்சம்...!
உஸ்மான்(ரலி) கூறினார்கள் :
உலகத்தைப் பற்றிய கவலையும் வேதனையும் மனதுக்குள் இருட்டைஏற்படுத்தும். மறுமை பற்றிய கவலை மனதுக்குள் வெளிச்சத்தைப்பாய்ச்சும்.

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு - இரண்டு இரண்டாக
அறிஞர்களுடன் சேர்ந்து இருப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்களின் பேச்சைக் கேளுங்கள். ஏனெனில் வறண்டுக் கிடக்கின்ற நிலத்தை மழை நீர் செழித்துத் தழைத்தோங்கச் செய்வதைப் போல இறைவன் செத்துக் கிடக்கிற மனதை ஞானத்தின் ஒளியால் உயிர்த்தெழச் செய்கின்றான்.

LinkWithin

Blog Widget by LinkWithin