பக்கங்கள்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

கோப்பை தரும் செய்தி!!



இன்று நாட்டில் நடப்பதென்ன...?

நாளிதழ்களைப் பிரிக்காமலும், தொலைக்காட்சியைத் தட்டாமலும், இணையத்தில் தேடாமலும் கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், கடத்தல்கள், அரசியல் சண்டைகள், ஆபாசக் கூத்துக்கள்...!

உலகெங்கும், நாடெங்கும் இதே சூழல்தான். இதே கோலம்தான். இதே அவலம்தான்.
போதாக்குறைக்குசுனாமி, விபத்து, உயிர்பலி என சோகங்களை இறைக்கும் நடப்புகளும் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்றன.
உயிரிழப்புகள், ஊனங்கள், காயங்கள்...!

நிறுத்துங்கள். இதில் என்ன அதிசயம்...! நாடறிந்த உண்மை அல்லவா, இது! என்கிறீர்களா?
உண்மைதான்.

என்றாலும் கலவரங்கள், உயிரிழப்புகள், கொலைகள், நோய்கள், விபத்துகள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர்மறையான நடத்தைகளும், செய்திகளும் முகத்திலடிக்கும் போது - படித்தவர்களே ஊழலில் ஈடுபடுகிற, பேராசிரியர்களே கற்பழிக்கிற, விஷய ஞானம் மிக்கவர்களே விதிமுறைகளை மீறுகிற ஆன்மீகப் பெரியோர்களே மாபாதகச் செயல்களில் ஈடுபடுகிற அவலங்கள் மனதை நோகடிக்கும் போது - என்ன செய்வீர்கள்?

நான் தேநீர் குடிப்பேன்.

நானும் தான்" என்று சொல்லிக் கொண்டே சுழற் நாற்காலியில் ஸ்டைலாக வந்தமர்ந்தார், நண்பர்.

தேநீர் கோப்பையை நீட்டினார்.

என்னைப் பொருத்தவரை தேநீர் பருகுவதும் ஒரு கலை. கண்ணாடிக் குவளையை விட, எவர்சில்வர் குவளைகளை விட, பீங்கான் கோப்பையில் தேநீர் குடிப்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இது சாதாரண கோப்பை அல்ல. கதை சொல்லும் கோப்பை இது என்றார் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன்.

அழகான தேநீர் கோப்பை அது.
ரோஜாப் பூ வேலைப்பாடுடன் நளினமாக, ரம்மியமாக, நேர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது.

திடீரென்று அது பேச தொடங்கி விட்டது.

'உங்களுக்குப் புரியாது; நான் சில மாதங்களாகத் தான் தேநீர் கோப்பையாக இருக்கிறேன். அதற்கு முன்பு களி மண்ணாக இருந்தேன். உயர் வகையான சிவந்த மண்...!

என்னுடைய முதலாளி தான் முதலில் என்னை எடுத்தார். உருட்டினார். மீண்டும் மீண்டும் உருட்டி ஓங்கித் தட்டத் தொடங்கினார்.
என்னால் தாங்க முடியவில்லை. என்னை விட்டு விடுங்கள்!" என்று கத்தினேன்.

அவர் புன்னகைத்தார். இவ்வளவு சீக்கிரமா? மாட்டேன்" என்று தலையசைத்தார்.

அடுத்து நான் ஒரு கை ராட்டினத்தில் வைக்கப்பட்டேன். பிறகு திடீரென்று நான் வேக வேகமாக சுழற்றப்பட்டேன்.
நிறுத்துங்கள் எனக்கு மயக்கமாக வருகிறது" என்று கத்தி விட்டேன்.
ஆனால் முதலாளியோ வெறுமனே தலையசைத்தார். இவ்வளவு சீக்கிரமா...? மாட்டேன்" என்றார்.

அடுத்து அவர் என்னை ஒரு ஓவனில் உலை அடுப்பில் போட்டு விட்டார். நான் அதற்கு முன்பு என்றுமே அந்தளவுக்கு சூடுபட்டது கிடையாது.
இவர் என்னை ஏன் எரிக்கிறார், என்றே எனக்குப் புரியவில்லை. கூக்குரலிட்டேன். அடுப்புக் கதவைத் தட்டினேன். அடுப்புக் கதவின் துவாரத்தில் அவருடைய முகத்தைக் காண முடிந்தது.
இவ்வளவு சீக்கிரமா...? மாட்டேன்" என்று தலையசைத்துக் கொண்டே சொல்வதை அவருடைய உதடுகளின் அசைவைக் கொண்டு என்னால் ஊகிக்க முடிந்தது.

அப்பாடா! ஒரு வழியாக கதவு திறந்தது.
அவர் என்னை எடுத்து ஷெல்ஃபில் வைத்து விட்டார். என் உடல் தணிய தொடங்கியது. ஒரு வழியாக தப்பித்தேன்" என்று பெருமூச்சு விட்டேன்.

அதற்குள் அவர் என்னை எடுத்து தூரிகையால் தடவி விட்டு பெயிண்ட் அடிக்கத் தொடங்கி விட்டார்.
சுள்ளென்று என்னுடைய மேனி தகித்தது. ஆவி பறந்தது. தோல் உரிவது போன்ற உணர்வு...! பயங்கரமாக இருந்தது.
நிறுத்து! நிறுத்து! என்று அடித்தொண்டையில் கத்தி விட்டேன்.
அவரோ வெறுமனே தலையசைத்து இவ்வளவு சீக்கிரமா? மாட்டேன்" என்றார்.

அடுத்துதிடுதிப்பென்று என்னை எடுத்து மீண்டும் உலை அடுப்பில் வைத்து விட்டார், அவர்.
முந்தைய அடுப்பைப் போன்றதல்ல இது. அதனை விட இரண்டு மடங்கு சூடாக இருந்தது. என் உடல் அனலாகக் கொதித்தது. மூச்சுத் திணறி உயிர் விட்டு விடுவேனோ என்று பயந்தேன். கெஞ்சினேன். மன்றாடினேன். கூக்குரலிட்டேன். கதறியழுதேன்.
ஆனால் இவ்வளவு சீக்கிரமா...! மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கதவிடுக்கிலிருந்து உற்றுப் பார்த்த போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்தது.

அடுத்து நான் நம்பிக்கையை முற்றாக இழந்து விட்டேன். என்னுடைய கதை முடிந்து போச்சு என்றே நம்பினேன். கண்களை மூடிக் கொண்டேன்.
திடீரென்று கதவு திறந்தது. அவர் என்னை எடுத்து ஷெல்ஃபில் வைத்தார். ஷெல்ஃபின் சூழல் இதமாக, குளிர்ச்சியாக இருக்க, நீண்ட நேரத்துக்குப் பிறகு புன்னகைத்தேன்.

ஓரிரு மணி நேரம் கழிந்து விட்டது. என்னுடைய எஜமானர் வந்தார். என்னிடம் ஒரு கண்ணாடியைத் தந்தார்.
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். நான் தானா அது...?" என்னால் நம்பவே முடியவில்லை. அழகு கண்ணா, அழகு!" என்று மகிழ்ச்சிப் பெருக்கில் உற்சாகக் குரல் கொடுத்தேன். நான் அழகாக இருக்கிறேன். நான் அழகாக இருக்கிறேன்" வாய் விட்டு சிரித்தேன்.

என்னுடைய எஜமானர் சொன்னார், இப்போதுபுரிகிறதா...! உன்னை உருட்டும் போதும், ஓங்கி அடிக்கும் போதும் உனக்கு வலிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் உருட்டாமலும், ஓங்கி அடிக்காமலும் விட்டிருந்தால் நீ காய்ந்து போய் இருப்பாய்! சக்கரத்தின் நடுவே வைத்து வேகமாகச் சுற்றிய போது மயக்கம் வருவது போல நீ நிலை தடுமாறியதும் எனக்குத் தெரியும். சக்கரத்தைச் சுழற்றுவதை நடுவிலேயே நிறுத்தியிருந்தால் உனக்குள் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கும்...! உலை அடுப்பில் சூடும் அதிகம். புழுக்கமும் அதிகம். வலியும் வேதனையும் உயிரை எடுக்கும்" என்பதெல்லாம் எனக்கு தெரிந்தே இருந்தது. ஆனால் உன்னை அடுப்பில் வைக்காமல் விட்டு விட்டால் நீ உறுதியடைந்திருக்க மாட்டாய்! தூரிகை தடவும் போது ஆவி பறக்கும். அதனால் நீ துடியாய்த் துடிப்பாய் என்பதையும் நான் அறிவேன். ஆனால் உன் மீது பெயிண்ட் அடிக்காமல் விட்டிருந்தால் உனது வாழ்வு நிறமற்று, சோபையிழந்து, சுரத்தின்றி, சுவையின்றி, களையிழந்து போய் இருக்கும். இரண்டாவது அடுப்பில் உன்னை வைக்காமல் விட்டிருந்தால் உன்னால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. உறுதியும் கட்டுக்கோப்பும் குலைந்து போயிருக்கும். இப்போது நீ ஒரு அழகான கோப்பை ஆகி விட்டாய். தொடக்கத்தில் நீ ஒரு பிடிமண்ணாக இருந்த போது உன்னை எப்படி ஆக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அவ்வாறு நீ ஆகி விட்டாய். எனக்கு சந்தோஷம். உனக்கும்தானே...!" என்று என் எஜமான் விவரித்தார்.

தேநீர் கோப்பை சொல்லி முடித்தது.

மனித குலத்துக்காக எதைச் செய்கிறோம்; எதனை வழங்குகிறோம்; எதனைப் பறிக்கிறோம் என்கிற உணர்வும் தெளிவும் கொண்டவன் தான் இறைவன். அவன் அனைத்தையும் அறிந்தவன். எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவன்.அவன் தான் குயவன். அவனுடைய களிமண் தாம் நாம் எல்லாரும். அவன் நம்மை உருட்டுவான், தட்டுவான், எதையும் செய்து எதனையும் உண்டாக்குவான். அவனுடைய உவப்பைப் பெறுவதற்காக, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி வாழ்ந்தால் நிச்சயம் நன்மைதான். அதில் தான் மனித வாழ்வின் சூட்சுமமே அடங்கியுள்ளது.

தேநீர் கோப்பை சொன்ன கதையில் இத்துணை செய்திகளா...? சந்தோஷத்துடன், உம்மை என்னவோ என்று நினைத்தேன்...! ஆனால் உம்முடைய தேநீர் கோப்பையும் தத்துவம் பேசுகிறதே..." என்றேன்.என்னவாக நினைத்தீர்?" என்று முஷ்டியை மடக்கிக் கொண்டு வேகமாக நெருங்கினார், நண்பர்.

அதனை விடுங்கள். முத்தாய்ப்பாக ஒரு நபிமொழியைக் கேளுங்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
இறை நம்பிக்கையாளரின் நிலை வியப்பானது! திண்ணமாக அவனுடைய பணிகள் அனைத்தும் நன்மையாகவே உள்ளன. இத்தகையதொரு நற்பேறு இறைநம்பிக்கையாளனை அன்றி வேறு யாருக்கும் இல்லை! அவனுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறான்; அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் நன்றி செலுத்துகின்றான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகின்றது. (அதாவது எந்தவொரு நிலையிலும் அவன் நன்மையைத் திரட்டிக் கொள்வான்.)"
Cross posted in நெஞ்சோடு

LinkWithin

Blog Widget by LinkWithin