பக்கங்கள்

சனி, 9 ஏப்ரல், 2011

மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் மறைவு



முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லபாமி ஹிந்த் பேரியக்கத்தின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவருமான மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் 6 ஏப்ரல் 2011 அன்று காலமானார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அவருக்கு வயது 94. மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி காலத்தில் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மூத்த இயக்கத் தலைவர் அவர். அவருடைய மறைவுடன் ஒரு யுகம் நிறைவு பெற்றுவிட்டது எனலாம். இயக்கத்தின் தொடக்கக்காலத்திலிருந்து அதன் ஏற்றஇறக்கங்களுடனும் வெற்றி தோல்விகளுடனும் பின்னிப் பிணைந்திருந்தவர் மௌலானா ஷஃபி மூனிஸ்.

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினமே என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தம்முடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


உத்திரப் பிரதேசத்தில் ஒரு  கிராமத்தில் பிறந்தவர் அவர். தொடக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்திருந்தார். அதிலும் சோஷலிஸ கொள்கைகளைப் பேசி வந்த காங்கிரஸ் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு ஸலஃபி ஆலிமுடன் பழக்கம் ஏற்பட்டது. இவருடைய அறிவுக்கூர்மையையும் சமுதாயச் சிந்தனையையும் உளத்தூய்மையையும் பார்த்த அந்த ஸலஃபி அறிஞர் இந்த இளைஞரை எப்படியாவது கவர வேண்டும் என்கிற எண்ணத்துடன் நெருங்கிப் பழகினார். ஆனாலும் ஷஃபி மூனிஸ் படிகின்ற மாதிரி தெரியாததால் நூல்களைக் கொடுக்கத் தொடங்கினார். அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ‘இஸ்லாம் அவ்ர் மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் . இஸ்லாமும் தற்போதைய அரசியல் போராட்டமும்’ என்கிற நூல். மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய நூல் அது. இளைஞர் ஷஃபி மூனிஸின் பார்வையையும் சிந்திக்கும் கோணத்தையும் முற்றாக மாற்றி அமைத்துவிட்டது அந்நூல்.

அந்நூல் படித்து இயக்கப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய ஷஃபி மூனிஸ் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. காஜியாபாத் மாநகர ஜமாஅத் கிளைத்தலைவர், தில்லி மாநகர ஜமாஅத் தலைவர், தில்லி மாநிலத் தலைவர், அந்தக் காலத்து ஹைதராபாத் மாகாணத் தலைவர், மேற்கு உத்திரப்பிரதேச மாநிலத் தலைவர் என அடுத்தடுத்து பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் அவர் சில காலம் செயலாற்றியிருக்கின்றார். ஜமாஅத்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபை, மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக பல்லாண்டுகளாக மீண்டும் மீண்டும் தேர்வாகி வந்துள்ளார். தற்போதைய மத்தியப் பிரதிநிதிகள் சபையிலும் அவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மௌலானாவுக்கு வயது 94. இறுதி மூச்சு வரை இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சத்தியப் போராளிதான் அவர். அவர் ஓர் அறப் போராளியாக, நிர்வாகியாக, இயக்கச் சிந்தனையாளராக, வழிகாட்டியாக தம்முடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்துவிட்டவர் அவர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், ஃபாரம் ஃபார் டெமாக்ரஸி அண்டு கம்யூனல் அமிட்டி, தி ஸ்காலர் ஸ்கூல் உட்பட ஏராளமான அமைப்புகளின் உருவாக்கத்தில் அவரும் பெரும் பங்கு வகித்திருக்கின்றார். மௌலானா ஷஃபி மூனிஸ் அவர்களின் நேர்காணல்களை அபூர்வமாகத்தான் படித்திருப்பீர்கள். சமரசத்தில் ஃபாரம் தொடர்பாக நேர்காணல் ஒன்று வந்திருக்கின்றது. அவருடைய செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் அதிகமாக வெளி உலகுக்குத் தெரிவதில்லை. அவருடைய புகைப்படமும் அதிகமாக பதிவாவதில்லை. என்றாலும் மௌன உழைப்பாளியாக இயக்கப் பணிகளில் இரண்டறக் கலந்துவிட்டிருந்தார் அவர். இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அதனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர். ஷஃபி மூனிஸ் என்றால் ஜமாஅத்தே இஸ்லாமி என்கிற அளவுக்கு இயக்கத்தையும் தன்னையும் பின்னிப் பிணைத்துக் கொண்டவர்.
6 ஏப்ரல் அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தில்லியில் பட்லா ஹவுஸ் அடக்கத்தலத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் ஜமாஅத்தின் முக்கியமான மனிதர்கள் அனைவரும் அங்கு திரண்டுவிட்டிருந்தனர். அகில இந்தியத் தலைவர், பொதுச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்கள், மத்தியத் தலைமையகப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், ஊழியர்கள் என ஜமாஅத்தின் ஒட்டுமொத்த பட்டாளமே அங்குத் திரண்டுவிட்டிருந்தது. ஆக, மௌலானா ஷஃபி மூனிஸ் எந்த மனிதர்களை தனது அன்புக்குரியவர்களாக மதிப்புக்குரியவர்களாக நேசித்து வந்தாரோ, எவர்களுக்கு தன்னுடைய வாழ்வில் மற்றெல்லாரை விடவும்மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தாரோ அவர்கள் எல்லாருமே அங்கு குழுமி விட்டிருந்தனர்.

மௌலானாவுக்கு இயக்கம்தான் எல்லாமே. இயக்கம், இயக்கம், இயக்கம் என்று ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார் அவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது அந்த இயக்கமே - ஒட்டுமொத்த இயக்கமே- அவரை வழியனுப்பத் திரண்டுவிட்டது. அந்தக் காட்சி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்திருக்க வேண்டும்.

ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார்:

கடந்த ஏப்ரல் 3 முதல் 7 வரை நடந்த மத்தியப் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மௌலானா ஷஃபி மூனிஸ் தள்ளாத வயதிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும் மத்தியப் பிரதிநிதிகள் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஏப்ரல் 2 அன்று நடந்த மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அவர் எனக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தார். புன்னகை ததும்ப அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த காட்சி இன்றும் என்னுடைய மனத்திரையில் பதிந்திருக்கின்றது.
அவர் எங்களுடம் ஏப்ரல் 5 மாலை வரை இருந்தார். மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் தன்னுடைய வாக்குகளைப் பதிவு செய்து, கையெழுத்திட்டு, பொறுப்பாளர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவர் போகும் போது நண்பர்கள் பலரையும் சந்தித்து கைகுலுக்கிவிட்டே சென்றார். நானும் அவருடன் கூடவே பேசிக்கொண்டே நடந்து சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தேன். அடுத்த நாள் அவர் வர மாட்டார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அடுத்த நாள் காலை அமர்வில்தான் அந்தச் செய்தி வந்தது. மௌலானா அவர்கள் இரவு படுத்துக் கொண்டிருந்த நிலையில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. அன்று மதியமே அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. நாங்கள் எல்லோருமே அவருடைய வீட்டுக்குப் போனோம். அவர் மிகவும் நிம்மதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அதரங்களில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் திறப்பார் :  “ஹதராபாதிலிருந்து ஏதாவது புதிய செய்தி இருக்கின்றதா? ஏதாவது நல்ல செய்தி உண்டா?” என விசாரிப்பாரோ என்றே தோன்றியது.

نشان  مرد   مومن   باتو   گویم 

  چوں مرگ آید تبسم بر لب اوست

“ஒரு நம்பிக்கையாளனின் அடையாளத்தைச் சொல்லட்டுமா? மரணம் வரும்போது அவருடைய முகத்தில் புன்னகை இருக்கும்” என்கிற பாரசீக கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்று மாலை அவருடைய உடலை ஜமாஅத் தலைமையகத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  அன்று இரவு இஷாவுக்குப் பிறகு நடந்த ஜனாஸா தொழுகையிலும் தொடர்ந்து நல்லடக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
அவர் ஜமாஅத்துக்காகவே வாழ்ந்தார். ஜமாஅத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கு சாட்சியானார். ஜமாஅத்தின் முக்கியமான அகில இந்திய அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவர் இறந்து போனார்.  

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அகில இந்தியத் தலைவராகத் தேர்வு!

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கத்தின் அகில இந்தியத் தலைவராக மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! 

தமிழகத்தைச் சேர்ந்தவர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் 1935-இல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கருகே புத்தகரம் கிராமத்தில் பிறந்தார்கள். அந்தக் கிராமத்தின் உர்தூ பள்ளியில் தொடக்கக்கல்வியைப் பயின்ற பிறகு உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் சேர்ந்து மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முன்ஷி ஃபாஸில் பட்டமும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் படித்துத் தேர்ச்சி பெற்றார்கள்.

பதின்பருவத்திலேயே இயக்கத் தொடர்பு
படிப்பை முடித்த கையோடு வட நாடு சென்று ராம்பூரில் ஜமாஅத் தலைமையகத்தில் தம்மை சேர்த்துக் கொண்டார். 1954-இல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். அலிகர் கிளையின் தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றி இருக்கின்றார். 1990- இலிருந்து 2007 வரை ஜமாத்தின்  அகில இந்தியத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர கடந்த பல்லாண்டுகளாக ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை மற்றும் மத்திய ஆலோசனைகள் குழு ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராகவும் அவர் செயலாற்றி வந்துள்ளார்

பத்திரிகையாளர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி ஒரு பத்திரிகையாளரும் கூட.  ஜிந்தகி நவ் என்கிற உர்தூ மாத இதழின் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு.  கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற காலாண்டிதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.


அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களும் ஒருவர்.

எழுத்தாளர், பன்னூலாசிரியர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. சற்றொப்ப முப்பத்து ஆறு நூல்களை யாத்திருக்கின்றார். இவற்றில் பதினேழு நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. தமிழிலும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம் பெண்களின் பங்கு, மக்கள் சேவை, ஒன்றே குலம் ஒருவனே தேவன், பெண்களும் இஸ்லாமும் ஆகிய முத்தான ஐந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இவற்றை சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. 

இவற்றில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்கிற நூல் அரபி, ஆங்கிலம், துருக்கி, இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற நூல் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மராட்டி, குஜராத்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. 

இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து, உரிமைகள் பொறுப்புகள், நாட்டு நடப்பு, ஃபிக்ஹ் விவகாரங்கள், குடும்ப அமைப்பு, அடிப்படைக் கோட்பாடுகள், இஸ்லாமிய இயக்கம் என பல்வேறு தலைப்புகளில் நிறைய எழுதியிருக்கும் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் இன்று சமகால மார்க்க அறிஞர்களில் தனிச்சிறப்பும் மகத்துவமும் பெற்றவராக ஜொலிக்கின்றார். 

கல்வியாளர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு கல்வியாளரும் கூட. அலிகரில் பல்லாண்டுகளாகச் செயலாற்றி வரும் இதாரா-ஏ-தஹ்கீகே தஸ்னீஃபே இஸ்லாமி ஆய்வுக்கழகத்தின் செயலாளராக, தலைவராக சேவையாற்றி வந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் வாரங்கல் நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துஸ் ஸுஃபா பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருக்கின்றார். இதே போன்று உத்திரப் பிரதேசம் ஆஜம்கர் பல்ரியா கஞ்சு நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துல் ஃபலாஹ் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் இருக்கின்றார்.

சனி, 26 பிப்ரவரி, 2011

இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி?


அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்  “ஒவ்வொரு மனிதனின் உடலிலும் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகளும் இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு எலும்பு மூட்டும் ஒரு ஸதகா அல்லது நன்றியறிவத்தலை வேண்டுகின்றது. எனவே ஒருவர் அல்லாஹ் அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அஸ்தக்ஃபிருல்லாஹ் சொல்கின்றார்; மக்கள் நடக்கின்ற பாதையிலிருந்து கல்லையோ, எலும்புத் துண்டையோ  அப்புறப்படுத்துகின்றார்; அல்லது நல்லவற்றைச் செய்வுமாறு மக்களை ஏவுகின்றார்; அல்லவற்றிலிருந்து விலகியிருக்குமாறு மக்களைத் தடுக்கின்றார்; இதுபோன்று முந்நூற்றறுபது வகையான செயல்களில் ஈடுபடுகின்றார் எனில், அவர் அந்த நாளில் நரக நெருப்பிலிருந்து தன்னுடைய உடலை அப்புறப்படுத்திய நிலையில் இந்த உலகில் இங்குமங்கும் நடக்கின்றவராகின்றார்”

நூல் : முஸ்லிம்

விளக்கம் :
இந்த நபிமொழியில் மனிதன் மீது இறைவன் பொழிந்துள்ள கணக்கற்ற அருட்கொடைகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அருள்வளங்களை மனிதன் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்நேரமும் அவற்றைக் குறித்த விழிப்பு உணர்வுடன் வாழ வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி சிந்தையிலும் செயலிலும் நன்றியுணர்வு மிகைத்திருக்க இயங்க வேண்டும் என்றும் அந்த அருட்கொடைகளைக் கொடுத்தவனை மறந்து, நன்றி கெட்டத் தனத்துடன் இறைவனை மறுத்து வாழ்வது எந்த வகையிலும் சரியான வழிமுறை ஆகாது என்றும் இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி என்பது குறித்தும் இந்த நபிமொழியில் அழகிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இப்படித்தான் நன்றி செலுத்த வேண்டும் என்று குறுகிய நடைமுறைகளைத் திணிக்காமல், நன்றி செலுத்துவதற்கான வழிமுறையை வரம்பில்லாத அளவுக்கு விரித்து இறைவன் மிகப்பெரும் அருள் செய்திருக்கின்றான் என்கிற உண்மை இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்லாஹ் அக்பர் என அல்லாஹ்வின் மேன்மையைப் பறைசாற்றுவதும், அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வின் புகழ் பாடுவதும், சுப்ஹானல்லாஹ் என அல்லாஹ்வின் தூய்மையை துதிப்பதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும் என்று அறிவிப்பதோடு நின்றுவிடவில்லை. இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செய்யப்படுகின்ற எந்தவொரு நற்செயலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஒப்பானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடலில் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகள் இருக்கின்றனவெனில், அந்த எலும்பு மூட்டு ஒவ்வொன்றும் இறைவன் மனிதனுக்கு செய்துள்ள மிகப் பெரும் நன்மையாகும். அந்த எலும்பு மூட்டுகளில் ஒன்றாவது குறைந்து போனாலும், செயலிழந்து போனாலும், முடங்கிப் போனாலும் அதனால் மனிதன் மிகப் பெரும் சிரமத்துக்குள்ளாகிவிடுகின்றான்.

இந்த நிலையில் இந்த முந்நூற்றறுபது அருள்வளங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி? இறைவனின் மேன்மையைப் பறைசாற்றியும், இறைவனைப் புகழ்ந்தும், இறைவனின் தூய்மையை துதிபாடியும் நன்றியுணர்வால் நம்முடைய நாவுகளைத் தோய்த்தெடுத்து நம்முடைய நன்றியை வெளிப்படுத்தலாம். அவனுக்கு முன்னால் சிரம்தாழ்த்தி நன்றி செலுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவதொரு நற்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருத்தல்; தீமையிலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களை மீட்பதற்காக ஓயாமல் ஒழியாமல் பாடுபடுதல்; நன்மையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள் என அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபடுதல்; தீமைகளிலிருந்து அவர்களை விலக்குவதற்காக முழுமூச்சுடன் பாடுபடுதல் போன்ற அறப்பணிகளைச் செய்வதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் போகின்ற பாதையில் கிடக்கின்ற கற்களை அகற்றுதல், பாதையில் மக்களுக்குத் தொல்லை தருகின்ற, ஊறு விளைவிக்கின்ற பொருட்கள் ஏதேனும் கிடந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன அறச்செயல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இவ்வாறாக, அன்றாடம் கிடைக்கின்ற சின்னச் சின்ன வாய்ப்புகளையும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்தோமெனில் நம்முடைய நிலை படிப்படியாக வளர்ந்து ஈடேற்றம் பெறுவதற்காக முயல்கின்றவர்கள் என்கிற நிலையையும் தாண்டி ஈடேற்றம் பெற்றவர்கள் என்கிற நிலைக்கு நாம் உயர்ந்துவிடுவோம்.

LinkWithin

Blog Widget by LinkWithin