பக்கங்கள்

சனி, 26 பிப்ரவரி, 2011

இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி?


அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்  “ஒவ்வொரு மனிதனின் உடலிலும் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகளும் இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு எலும்பு மூட்டும் ஒரு ஸதகா அல்லது நன்றியறிவத்தலை வேண்டுகின்றது. எனவே ஒருவர் அல்லாஹ் அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அஸ்தக்ஃபிருல்லாஹ் சொல்கின்றார்; மக்கள் நடக்கின்ற பாதையிலிருந்து கல்லையோ, எலும்புத் துண்டையோ  அப்புறப்படுத்துகின்றார்; அல்லது நல்லவற்றைச் செய்வுமாறு மக்களை ஏவுகின்றார்; அல்லவற்றிலிருந்து விலகியிருக்குமாறு மக்களைத் தடுக்கின்றார்; இதுபோன்று முந்நூற்றறுபது வகையான செயல்களில் ஈடுபடுகின்றார் எனில், அவர் அந்த நாளில் நரக நெருப்பிலிருந்து தன்னுடைய உடலை அப்புறப்படுத்திய நிலையில் இந்த உலகில் இங்குமங்கும் நடக்கின்றவராகின்றார்”

நூல் : முஸ்லிம்

விளக்கம் :
இந்த நபிமொழியில் மனிதன் மீது இறைவன் பொழிந்துள்ள கணக்கற்ற அருட்கொடைகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அருள்வளங்களை மனிதன் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்நேரமும் அவற்றைக் குறித்த விழிப்பு உணர்வுடன் வாழ வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி சிந்தையிலும் செயலிலும் நன்றியுணர்வு மிகைத்திருக்க இயங்க வேண்டும் என்றும் அந்த அருட்கொடைகளைக் கொடுத்தவனை மறந்து, நன்றி கெட்டத் தனத்துடன் இறைவனை மறுத்து வாழ்வது எந்த வகையிலும் சரியான வழிமுறை ஆகாது என்றும் இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி என்பது குறித்தும் இந்த நபிமொழியில் அழகிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இப்படித்தான் நன்றி செலுத்த வேண்டும் என்று குறுகிய நடைமுறைகளைத் திணிக்காமல், நன்றி செலுத்துவதற்கான வழிமுறையை வரம்பில்லாத அளவுக்கு விரித்து இறைவன் மிகப்பெரும் அருள் செய்திருக்கின்றான் என்கிற உண்மை இந்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்லாஹ் அக்பர் என அல்லாஹ்வின் மேன்மையைப் பறைசாற்றுவதும், அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வின் புகழ் பாடுவதும், சுப்ஹானல்லாஹ் என அல்லாஹ்வின் தூய்மையை துதிப்பதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும் என்று அறிவிப்பதோடு நின்றுவிடவில்லை. இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செய்யப்படுகின்ற எந்தவொரு நற்செயலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஒப்பானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடலில் முந்நூற்றறுபது எலும்பு மூட்டுகள் இருக்கின்றனவெனில், அந்த எலும்பு மூட்டு ஒவ்வொன்றும் இறைவன் மனிதனுக்கு செய்துள்ள மிகப் பெரும் நன்மையாகும். அந்த எலும்பு மூட்டுகளில் ஒன்றாவது குறைந்து போனாலும், செயலிழந்து போனாலும், முடங்கிப் போனாலும் அதனால் மனிதன் மிகப் பெரும் சிரமத்துக்குள்ளாகிவிடுகின்றான்.

இந்த நிலையில் இந்த முந்நூற்றறுபது அருள்வளங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதெப்படி? இறைவனின் மேன்மையைப் பறைசாற்றியும், இறைவனைப் புகழ்ந்தும், இறைவனின் தூய்மையை துதிபாடியும் நன்றியுணர்வால் நம்முடைய நாவுகளைத் தோய்த்தெடுத்து நம்முடைய நன்றியை வெளிப்படுத்தலாம். அவனுக்கு முன்னால் சிரம்தாழ்த்தி நன்றி செலுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவதொரு நற்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருத்தல்; தீமையிலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களை மீட்பதற்காக ஓயாமல் ஒழியாமல் பாடுபடுதல்; நன்மையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள் என அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபடுதல்; தீமைகளிலிருந்து அவர்களை விலக்குவதற்காக முழுமூச்சுடன் பாடுபடுதல் போன்ற அறப்பணிகளைச் செய்வதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் போகின்ற பாதையில் கிடக்கின்ற கற்களை அகற்றுதல், பாதையில் மக்களுக்குத் தொல்லை தருகின்ற, ஊறு விளைவிக்கின்ற பொருட்கள் ஏதேனும் கிடந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன அறச்செயல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

இவ்வாறாக, அன்றாடம் கிடைக்கின்ற சின்னச் சின்ன வாய்ப்புகளையும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்தோமெனில் நம்முடைய நிலை படிப்படியாக வளர்ந்து ஈடேற்றம் பெறுவதற்காக முயல்கின்றவர்கள் என்கிற நிலையையும் தாண்டி ஈடேற்றம் பெற்றவர்கள் என்கிற நிலைக்கு நாம் உயர்ந்துவிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin