பக்கங்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2009

வீடும் வாசலும் வாகனமும்...!


அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: மறுமை நாளில் செயல்களை எடை போடும் மீஜான் எனும் எடைத் தட்டில் வைக்கப்படும் பொருள்கள் அனைத்திலும் மிகவும் கனம் வாய்ந்தது நற்குணமே!
அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதி

விளக்கம்

நற்குணங்களும் நன்னடத்தையும் தான் மனித வாழ்வின் உண்மையான அழகு ஆகும். உண்மையான மனித நடத்தையோடு இயைந்து போவது நற்குணமும் நன்னடத்தையும்தான். எனவே மீஜான் எனும் எடைத்தட்டில் எல்லா செயல்களை விடவும் மிக அதிகமான கனம் வாய்ந்ததாக நற்குணமும் நன்னடத்தையும் இருப்பது இயல்பான ஒன்றே.

மனிதனிடம் என்னென்ன வாழ்க்கை வசதிகள் உள்ளன? எத்தனை மகிழுந்துகள் உள்ளன? மாட மாளிகைகள் எத்தனை? போன்ற விவரங்களைக் கொண்டு எவரும் மனிதனை அடையாளம் காண்பதில்லை. ஆள் எப்படி? குணம் எத்தகையது? நடத்தை எப்படி என்பதைக் கொண்டே ஒரு மனிதன் உண்மையாக அடையாளம் காணப்படுகிறான்.

உலகில் என்ன சம்பாதித்தாய்? எத்தனை மகிழுந்துகளை வைத்திருந்தாய்? வங்கி இருப்பு எவ்வளவு சேமித்திருந்தாய்? எந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தாய் என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டான். எத்தகைய ஆளுமையுடன் எத்தகைய குணங்களுடன் வந்துள்ளாய் என்பதுதான் அசல் கேள்வியாக இருக்கும்.

ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒருவரின் சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நற்குணம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டே அவருடைய ஆளுமை அமையும்.

ஒருவர் என்னதான் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக, செல்வாக்கு மிக்கவராக, அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரிடம் நற்குணமும், நன்னடத்தையும் உயர் பண்புகளும் இல்லாமல் போனால் உண்மையில் அவர் பஞ்சப் பராரியான, இழிவான பிறவியே ஆவார்.

சனி, 28 மார்ச், 2009

கடைசி வரை கல்வி!!


அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் பெயரால்!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்:
இறைநம்பிக்கையாளனின் வயிறு நன்மையால் (அறிவு, ஞானம் நிறைந்த பேச்சுக்களால்) என்றைக்குமே நிறைவதில்லை. அவன் அதனைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றான். எதுவரையெனில் கடைசியில் சுவனத்திற்குச் சென்று சேர்ந்து விடுகின்றான்.
அறிவிப்பாளர் : அபு சயீத் குத்ரி (ரலி)
நூல் : திர்மிதி


சனி, 25 அக்டோபர், 2008

செயல்படு; செலவு செய்; விலகி இரு!

செயல்படு; செலவு செய்; விலகி இரு!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: "கற்றதற்கேற்ப செயல்பட்டவனுக்கும்தன்னுடைய தேவைகள் போக எஞ்சியதை (இறைவழியில்) செலவுசெய்தவனுக்கும் தேவையற்ற பயனற்ற பேச்சுக்களிலிருந்துமசெயல்பாடுகளிலிருந்தும் விலகி இருந்தவனுக்கும் நற்செய்தி இருக்கிறது."
அறிவிப்பாளர்: ரகப் மிஸ்ரி (ரலி)
நூல்: தப்ரானி
விளக்கம்
இந்த நபிமொழியில் மூன்று விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணல் நபிகளார்(ஸல்) முன்று வகையான நபர்களுக்கு நற்செய்தி அறிவித்துள்ளார்.

முதலாமவர், தான் கற்றுக் கொண்டதற்கேற்ப செயல்படும் பண்பு கொண்டவர். இன்று அறிவுக்குப் பஞ்சம் கிடையாது. செயலுக்குத் தான் பற்றாக்குறை காணப்படுகிறது. Knowledge explosion என்கிற அறிவுப் புரட்சி வெடித்திருக்கிற யுகம் இது.

இந்த அறிவு யுகத்தில் மார்க்க அறிவு, மார்க்கத்தைப் பற்றிய தகவல்கள் கூட எல்லாருக்கும் மிகத் தாராளமாகவே கிடைக்கிறது...! எத்தனை பத்திரிகைகள்..! எத்தனை வலைத் தளங்கள்..! எத்தனை எத்தனை நூல்கள்..! தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்..!

இதன் காரணமாக 'சோதனை' கூட கடுமையாகிவிட்டது. தீமை எது? நன்மை எது? எதனைச் செய்ய வேண்டும்? எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்? எல்லோருமே அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் அறிவு மட்டும் போதாது. அறிவாளிகளுக்கு நற்செய்தி அளிக்கப்படவில்லை. கற்றதற்கேற்ப செயல்படுபவருக்கே நற்செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக நற்செய்தி சொல்லப்பட்டிருப்பவரின் சிறப்பு என்னவெனில் அவர் தன்னுடைய தேவைகளுக்கு அதிகமாக எஞ்சி இருக்கும் பொருளை இறைவனின் வழியில் செலவிடக் கூடியவராக இருப்பார்.
எது தேவை? எது ஆடம்பரம்? இந்த இரண்டையும் பிரிக்கின்ற எல்லைக் கொடு எது? நிர்ணயிப்பது கடினம். கொஞ்சம் சிக்கலான நுணுக்கமான பிரச்னை தான்.
எல்லோருமே தத்தமது வாழ்க்கைத் தரத்துக்கேற்ப தத்தமது தேவைகளை நிர்ணயிக்கின்றார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக ஒருவரிடம் எத்துணை பொருள் இருக்கிறது என்பதை மற்றவர்களால் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரும் சுயமாக அதனை நிர்ணயித்துக் கொள்ளவது தான் நல்லது.

LinkWithin

Blog Widget by LinkWithin